இந்திய அணிக்காக களம் கண்ட இளம் வீரருக்கு பாராட்டு
மன்னார்குடி., செப்.25-
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற மன்னார்குடியைச் சேர்ந்த ஹரிஹரன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ஹரிஹரன், சிறுவயது முதலே பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது ஆர்வத்திற்கு குடும்பத்தினர் அளித்த ஊக்கத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். பின்னர் தேசிய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் ஹரிஹரன்-ரூபன் இணை பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றது.
தொடர்ச்சியான பயிற்சி மற்றும் போட்டி அனுபவத்தின் மூலம் தேசிய அளவில் முன்னேறிய ஹரிஹரன், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.
தந்தை பெருமிதம்
ஹரிஹரனின் வெற்றி அவரது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தந்தை அம்சகர்ணன் கூறியதாவது:..
“எனது மகன் இந்திய நாட்டுக்காக சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவரது விளையாட்டு பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
ஹரிஹரன் தொடர்ந்து சர்வதேச அளவில் சாதனைகளை படைத்து, எதிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
மன்னார்குடியில் இருந்து சர்வதேச விளையாட்டு அரங்கிற்கு உயர்ந்து இந்தியாவுக்காக பதக்கம் வென்றுள்ள ஹரிஹரனுக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.