தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி. சத்யபாமாவை ஆதரித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி தாராபுரத்தில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம், கவுண்டச்சிபுதூர், சமத்தூர், பாலசுப்பிரமணியம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்டினார். அவர் சென்ற இடங்களில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை, விவசாயிகளுக்குத் தேவையான பாசன நீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, தாராபுரம் தொகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயிகளின் பாசன நீர் தேவைக்கும் உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
பிரசாரத்தின்போது சில பொதுமக்கள் தங்களது வீடுகளின் கதவுகளில் முதலமைச்சர் விஜய் மற்றும் விசில் சின்னம் இடம்பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.