திருவண்ணாமலை:-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் இன்று (24.09.2026) கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து துறைகளின் பணிகள் குறித்து செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் ஊராட்சியிலுள்ள நியாய விலைக் கடையில் பொருட்களின் இருப்பு குறித்தும், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், பொருட்கள் வழங்கியதற்கான பதிவேடுகளில் விவரம் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, கோணலூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்கள் பதிவேடுகளில் முறையாக பதிவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி உன்றிய ஆரம்ப்பள்ளியில் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தி, பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாடழகானந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.9,80,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரச்செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நாற்றாங்கால் பண்ணையில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
மேலும் இராஜந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையையும், ரூ.8 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மதிய உணவு கூடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
.
தொடர்ந்து வேட்டவலத்திலுள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியிலும், வேட்டவலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடி பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ரூ.1 கோடியே 44 இலட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய 07 வகுப்புறை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேட்டவலம் பேரூராட்சி இராஜாஜி தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். வேட்டவலத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கூழ்மப்பிரிப்பு நிலையம் (Dialysis Centre) அமைக்கப்பட்டு வருவதையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் (RO Plant) அமைக்கப்பட்டு வருவதையும், மருந்து இருப்புகள், அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை ஆய்வு கொண்டார். மேலும் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஏதுவாக அனுகுமலை ஊராட்சி மற்றும் வேட்டவலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள இடங்களில் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மதுசெழியன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சிவநாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள், திருவண்ணாமலை கிழக்கு) விமலன், திட்ட அலுவலர் (ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி. கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் இந்திரா, வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் வரலட்சுமி , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.