தேவேந்திரனுக்கு தியாகராஜர் காட்சி அளித்த ஐதீக நிகழ்வு நினைவுகூரப்பட்டது – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நீடாமங்கலம்., செப்.26-
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பூவனூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தேவேந்திரனுக்கு தியாகராஜ சுவாமி காட்சி அளித்ததாக கூறப்படும் ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
முசுகுந்த சக்கரவர்த்தி
முன்னொரு காலத்தில் திருவாரூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, தேவேந்திரனுக்கு உதவி செய்ததாகவும், தேவலோகத்தில் நடைபெற்ற போரில் சமரசம் ஏற்படுத்தியதாகவும் ஐதீகம் கூறுகிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவேந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தனது ஐராவதம், வெண்கொற்றக்குடை, சிம்மாசனம், ராஜ்யம், இந்திராணி ஆகியவற்றை தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது இந்திரலோகத்தில் வைத்து தேவேந்திரன் வழிபட்டு வந்த மரகத லிங்க வடிவிலான தியாகராஜ சுவாமியை முசுகுந்த சக்கரவர்த்தி கண்டார். அந்த சுவாமியையே தனக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்று பூலோகத்துக்கு கொண்டு வந்ததாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது.
தியாகராஜ சுவாமி தேவலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்த நிகழ்வுடன் தொடர்புடையதாக திருவாரூர் ஆழித்தேர் திருவிழா ஐதீகமும் கூறப்படுகிறது.
சிறப்பு பூஜைகள்
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில், தேவ சாயரட்சை காலத்தில் நடைபெறும் தேவேந்திரன் தரிசன நாள், நிறைபணி உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தியாகராஜ சுவாமி மற்றும் தனி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. நிறைபணி உற்சவத்தை முன்னிட்டு பூவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தியாகராஜ சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.