தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
துரோகம் செய்த வேட்பாளரைக் கேள்வி கேட்கும் மக்கள் மீது வழக்குப் போடுவதா? – விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி மீதும், தவெக தலைவர் விஜய் மீதும் கடும் விமர்சனம்
தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கன்னிவாடி, மூலனூர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து, உப்புத்துறைப்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இல்லாமல் கட்சி மாறியதால் இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது. மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் கட்சி மாறினால், அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆனால், கேள்வி கேட்கும் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது நியாயமல்ல. காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது.
மக்களின் கோபத்தையும், கேள்விகளையும் எதிர்கொள்ளாமல் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அடக்கிவிட முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே முக்கியம் என்றார்.
மேலும், கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய ஆறுதல் தெரிவிக்காதவர்கள், மக்களைப் பாதுகாப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என விமர்சித்தார். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதையும் குறிப்பிட்டார்.
கொரோனா காலத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள், இலவச ரேஷன் பொருட்கள், குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் தொகை, அம்மா உணவகம் மூலம் உணவு வழங்குதல், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.
தற்போதைய ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், போதைப்பொருள் புழக்கம், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
தமிழக அரசின் கடன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் சுமை மக்களையே பாதிக்கும் என்றும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலளிப்பதில்லை என்றும் விமர்சித்தார்.
தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவருடைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவிலிருந்து சென்றவர்களே எதிர்காலத்தில் விஜய்க்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, அதிமுக வேட்பாளர் பானுமதி எளிமையானவர் என்றும், ஏற்கனவே மக்கள் பணியில் ஈடுபட்டவர் என்றும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.