ஓய்வூதியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், மதுரை மாவட்டம் சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா, அருகில் ஒருநாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில், ஒன்றிய அரசும் தமிழக அரசும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய விதிகள் செல்லுபடியாக்கல் சட்டம், 2025-ஐ திரும்பப் பெற வேண்டும், 8-வது ஊதியக் குழுவின் நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சதவீத பஞ்சப்படி உயர்வை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், ஓய்வூதியத் தொகை மாற்றம் செய்யப்பட்டதற்கான காலத்தை 10 ஆண்டுகள் 8 மாதங்களாகக் குறைக்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும், என்.பி.எஸ்., யு.பி.எஸ். ஆகிய புதிய ஓய்வூதியத் திட்டங்களை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும், 18 மாத பஞ்சப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் மற்றும் விமான கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், வயது முதுமைக்கேற்ப கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கான சட்டபூர்வ தேசிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
தர்ணாவில் மாவட்ட துணைத்தலைவர் தினகரசாமி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பிச்சைராஜன் தொடக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து வட்டக்கிளை நிர்வாகிகள் தர்ணாவை வாழ்த்திப் பேசினர்.
மாவட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன் 12 அம்ச கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.
மாவட்ட பொருளாளர் நாராயணன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயராமன், மணிவண்ணன், மாவட்ட இணைச் செயலாளர்கள் பானு, அடைக்கன், முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து கருத்துரை யாற்றினர்.
மாநில செயலாளர் முனைவர் கிருஷ்ணன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத்தலைவர்ஞானத்தம்பி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் மூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிஜாஜா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் சிஐடியு பொதுச் செயலாளர் வாசுதேவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஆதறமிளகி நன்றி கூறினார்.