
மேச்சேரி,காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ்மன்றத்தில் “இன்றைய இளைய தலைமுறைக்கு சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கவிதா வரவேற்புரை வழங்கினார்.
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வக்குமார் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலரை, பேச்சாளராகத் திகழும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த மேடை நம் கல்லூரியின் மேடை எனப் பெருமிதத்தோடு தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் தமிழ்மாமணி நாகராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலைத் தமிழாசிரியர் தகடூர் சரவணன் அவர்கள் பட்டிமன்றத்தின் நடுவராகக் கலந்துகொண்டு கல்வி மட்டுமே அனைவரையும் உயர்த்தும் என்றும் ஊடகங்களின் நன்மை தீமையினையும் கூறி பட்டிமன்ற பேச்சாளர்களை வழிநடத்தினார். இப்பட்டிமன்றத்தில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூக ஊடகங்கள் வரமா? என்ற அணியில் மேகலா, ரஞ்சனி, யாஷிகா மற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமூக ஊடகங்கள் சாபமா? என்ற அணியில் ஜீவா, அமலாதீபிகா, ஜோதிவர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டு பட்டிமன்றத்தினைத் தங்களின் சொல்லாற்றலால் நிரப்பினர்.
பார்வையாளராகக் கலந்துகொண்ட அனைத்துத் துறை மாணவர்களும் பட்டிமன்ற மேடைப் பேச்சாளராகக் கலந்துகொண்ட தங்களுடன் பயிலும் மணவிகளின் பேச்சாற்றலைப் பார்த்துத் தங்களையும் உற்சாகப்படுத்தி ஊக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத்தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், பேராசிரியர் இளங்கோவன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் இராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், இணை செயலாளர் ஹரிசங்கர், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கா. கவிதா நன்றியுரை வழங்கினார்.