தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி செப்டம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், எல்.ஆர். நகல் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், மாஸ் கிளீனிங் பணிகளில் பழைய பணியாளர்களே பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் விவகாரம், குடிநீர் இணைப்புகளில் மோட்டார் அகற்றும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர்.
மாஸ் கிளீனிங் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பணிகள் முறையாக நடைபெறாவிட்டால் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தலாம் என மேயர் ஜெகன் தெரிவித்தார்.
மேலும், மாநகரில் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் இணைப்புகளில் மோட்டார் அகற்றும் நடவடிக்கை தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் மேயர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், மாநகராட்சி சுவர்களில் தனியார் விளம்பரங்கள் எழுதப்படுவது உள்ளிட்ட விவகாரங்களும் கூட்டத்தில் எழுப்பப்பட்டன.
இறுதியில் பேசிய மேயர் ஜெகன், அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறுகள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மக்களுக்காக சிறப்பாக செய்வதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.