கோவை: மருத்துவக் கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் சமூகச் சேவையில் சிறந்து விளங்கும் கோவையின் முன்னணி மருத்துவ நிறுவனமான PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PSG IMSR), தனது நிறுவன நாள் விழாவை 2026 வெகுவிமர்சியாகக் கொண்டாடியது. நூறாண்டுகளைக் கடந்து சமூகப் பணியாற்றி வரும் PSG & Sons’ Charities அறக்கட்டளையின் மகத்தான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் டி. எம். சுப்பாராவ் வரவேற்றுப் பேசினார். PSG & Sons’ Charities அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.
டாட்டா மருத்துவ மையத்தின் முன்னாள் இயக்குநரும், வேலூர் நாராயணா ஹெல்த் நிறுவனத்தின் மூத்த ஆலோசகருமான பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் மாம்மன் சண்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மருத்துவப் பயிற்சி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அரிய பங்களிப்பை அளித்த நான்கு சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு ‘சிறந்த முன்னாள் மாணவர் விருதுகள் 2026’ (Distinguished Alumni Awards) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சு ஆர். பிள்ளை, நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோபால் சுப்ரமணியம், ஃபின்லாந்து ஹெல்சிங்கியில் உள்ள ‘ஸ்கோப் இம்பேக்ட்’ அமைப்பின் தலைமை ஆலோசகர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுதர்சனம் எம். பி., மற்றும் வேலூர் சி.எம்.சி (CMC) மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பிப் பிரிவுப் பேராசிரியர் மற்றும் இணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஃபெலிக்ஸ் ஜெபசிங் கே. ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர்.
நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மருத்துவ வல்லுநர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்ட இந்த விழா, PSG ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கத்தின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.