தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் நேரடி தினக்கூலி பணியாளர்களுக்கு பி.எஃப். சந்தா பிடித்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள், கணினி பணியாளர்கள், பள்ளித் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நேரடி தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பி.எஃப். சந்தாவையும் முறையாகப் பிடித்தம் செய்து, அதற்கான கணக்கில் வரவு வைக்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாற்றும் சுமார் 1,300 தினக்கூலி பணியாளர்களில், சிலரது பி.எஃப். கணக்குகளில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை முறையாகக் காணப்படவில்லை எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைச் சரிசெய்து, தனியார் நிறுவனப் பணியாளர்களின் பி.எஃப். கணக்கிற்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 5ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த மனு கொடுக்கும் இயக்கத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் காசி சங்கரன், தாமோதரன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பூலான், ஜான் செல்வராஜ், மந்திரமூர்த்தி, காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *