திருவாரூர்., அக்.03-
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், காரைக்கால்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதிய இடவசதி இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் இந்த ரயிலில் 16 முன்பதிவு பெட்டிகளும், 5 பொதுப்பெட்டிகளும் உள்ளன. மூன்று மாநிலங்களை இணைக்கும் ரயில் என்பதால் தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் 3.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதால், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரயிலில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நாகப்பட்டினத்தில் மேலும் பயணிகள் ஏறியதால் பொதுப்பெட்டிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் முன்பதிவு பெட்டிகளில் நின்று பயணிக்குமாறு ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுப்பெட்டி பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டிகளில் இருந்த பொதுப்பெட்டி பயணிகளை கீழே இறக்கி, பொதுப்பெட்டிகளில் செல்லுமாறு ரயில்வே போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுப்பெட்டிகளிலும் இடமில்லாததால் பலர் ரயிலில் ஏற முடியாமல் தவித்தனர்.
ரயில் புறப்படத் தொடங்கியபோது வேகமாக ஓடி வந்த மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் ஓடும் ரயிலில் ஏறிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், குடும்பத்தில் பாதி பேர் ரயிலில் ஏறிய நிலையில், கைக்குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் இருந்த பெண்கள் சிலர் ரயிலில் ஏற முடியாமல் தவித்தனர்.
இதனால் பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரயிலில் ஏற முடியாத பயணிகள் அடுத்த ரயிலுக்காக மாலை 7.30 மணி வரை காத்திருந்து பின்னர் பயணம் செய்தனர்.