தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து தடுப்பணைகள் அமைத்து உருவாக்கப்பட்ட செயற்கை அருவிகளை அகற்றும் பணி, சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் ஐ.ஏ.எஸ். தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேக்கரை பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நீரோடைகள் மூலம் அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்று, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சில தனிநபர்கள் நீரோடைகளை மறித்து தடுப்பணைகள் மற்றும் செயற்கை அருவிகளை அமைத்து, சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. அருவிகளில் குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட கழிவுகள் நீரோடைகளில் கலந்து விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் மதுபாட்டில்கள் உடைந்து விவசாயிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பண்பொழி, வடகரை பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் நீரோடைகளை மறித்து 30-க்கும் மேற்பட்ட செயற்கை அருவிகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவின்பேரில், நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செயற்கையாக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்கள், கான்கிரீட் தடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டு, நீரோடைகள் பழைய பாதையில் செல்லும் வகையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் செங்கோட்டை தாசில்தார் மாரியப்பன், செங்கோட்டை வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரி மணிகண்ட ராஜா, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் ஜூலியட் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
அகற்றுவதில் சவால் அணைகள் போன்று வலுவாக கான்கிரீட் அமைப்புகளால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹிட்டாச்சி இயந்திரம் உள்ளிட்ட கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்தும், தேவையான இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டமைப்புகளை உடைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மேக்கரை பகுதியில் உள்ள அனைத்து செயற்கை அருவிகளையும் பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற வேண்டும். மீண்டும் நீரோடைகளை மறித்து தடுப்பணைகள் அமைத்து செயற்கை அருவிகள் உருவாக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை, தேவைப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு செலவிடும் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமே வசூலிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.