கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகில் மக்கள் சமூக நீதி பேரவை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சுமதி, பொருளாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் கோபால், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலத் தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பெண்கள் பங்கேற்று, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை வன்கொடுமைக்கு உட்படுத்தி, அவரிடம் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் பழனியைச் சேர்ந்த கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பொருளாதார மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்த கா.சு. நாகராசன், இராம வெங்கடேசன், மயிலை செந்தில் குமார், முகம்மது ரபீக், மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் ராயப்பன், குரீஸ் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.