பேராவூரணி, அக். 13:
தஞ்சாவூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா, பேராவூரணி எஸ்.டி.டி. திருமண மகாலில் நடைபெற்றது.

விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், புடவை, பழங்கள், காப்பரிசி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி, வளைகாப்பு செய்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 600 பேருக்கு, சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் இராமலிங்கம் கலந்துகொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு முறைகள், தவறாமல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியம், இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வது குறித்து அவர் எடுத்துரைத்தார்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வை உறுதிசெய்யும் நோக்கில், ஆண்டுதோறும் வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், த.வெ.க. மாவட்டச் செயலாளர் ஏனாதி சி.மதன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், கோ.இளங்கோவன், செ.ஞானப்பிரகாசம், குழ.செ.அருள்நம்பி, நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், முன்னாள் ஒன்றியத் துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, த.வெ.க. மாவட்டத் துணைச் செயலாளர் ரஞ்சித், ஒன்றியச் செயலாளர்கள் அருள்முருகன், பார்த்தசாரதி, விக்னேஷ், சுரேகா, வீரப்பன், பிரகாஷ், ராம.தெய்வீகம், நகரச் செயலாளர் ராஜ.விக்னேஷ் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பி.அனுசுயா, மேற்பார்வையாளர்கள் சொர்ணம், காமாட்சி, செல்வி, செல்வராணி, ராணி, முனியம்மா, ஜெயா, கண்காணிப்பாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், கந்தவேல், புள்ளியியல் ஆய்வாளர் ரமேஷ், அங்கன்வாடிப் பணியாளர்கள், தாய்மார்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பேராவூரணி நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *