தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த மாதம் பிறந்த குழந்தைகளில் முதற்கட்டமாக 75 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பி. சத்தியபாமா கலந்து கொண்டு, குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூலனூர், குண்டடம், தாராபுரம், கோவிந்தாபுரம், பொன்னாபுரம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்த சட்டமன்ற உறுப்பினர் பி. சத்தியபாமா, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளருமான கே.வி. ராமலிங்கம் மற்றும் அக்கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக 75 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், மருத்துவத் துறை அலுவலர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *