தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர்க்காயலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது திருச்செந்தூருக்கு நாளொன்றுக்கு 1.1 MLD குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பகுதி மக்கள்தொகை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 3.8 MLD க்கும் அதிகமான குடிநீர் தேவைப்படுகிறது. இதனால், திருச்செந்தூரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் தண்ணீர் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மஞ்சள் நீர்க்காயலில் இருந்து ஆத்தூர் வழியாகத் திருச்செந்தூருக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்குக் கடந்த திமுக ஆட்சியின்போதே ₹9.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஆத்தூர் வரை தண்ணீர் கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அங்கிருந்து திருச்செந்தூருக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்குத் தற்போதுள்ள குழாய்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லை. இதனால், பல்வேறு இடங்களில் குழாய் உடைப்புகளும் நீர்க் கசிவுகளும் ஏற்படுகின்றன. எனவே, சுமார் 15 கி.மீ. நீளமுள்ள குழாய்களைச் சீரமைப்பதற்கும், தொட்டியைப் புனரமைப்பதற்கும் ₹30 கோடி மதிப்பிலான புதிய திட்ட முன்மொழிவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவை அரசு ஏற்று, விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்றினால் மட்டுமே திருச்செந்தூருக்குத் தேவையான அளவு குடிநீரை வழங்க முடியும். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தற்போதைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களும் கோயிலுக்கு வரும் பக்தர்களும் தொடர்ந்து குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

அதேபோல், மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அரசிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் பேசினேன். அங்குள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், படகுகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்தும் அதனை சுட்டிக்காட்டுவதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே காவல்துறையின் பொறுப்பு. ஆனால் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில் நேரத்தைச் செலவிடுவது வியப்பளிப்பதாக உள்ளது.

இதுமட்டுமின்றி, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர். பல்வேறு குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தவெக அரசு எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் காட்டப்படும் ஆர்வத்தை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதில் காட்டப்படுவதில்லை.

முதலமைச்சர் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து மௌனம் காக்கிறார். முதலமைச்சர் விஜய் பஞ்ச் வசனங்களைப் பேசுவதற்கு மட்டுமே வாய் திறக்கிறார். சட்டமன்றத்திலும் பிற நேரங்களிலும் உரிய விளக்கங்களை அளிப்பதில்லை. மேலும், பத்திரிகையாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளிக்காத முதலமைச்சராக இருக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தற்போது திறந்து வைக்கப்படும் பல்வேறு கட்டிடங்கள் மற்றும் திட்டங்கள், திமுக ஆட்சிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டவையாகும். ஆனால், அவை திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டவை என்பதைக்கூட குறிப்பிடாமல், தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களிலேயே இத்திட்டங்களைக் கட்டி முடித்ததைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, ரீல்ஸ்கள் வெளியிட்டு அவற்றைத் திறந்து வைத்து வருகின்றனர் என்று விமர்சித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *