கும்பகோணம். அக்.31-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், போதைப் பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

கும்பகோணம் மகாமகக் குளம் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், பாலக்கரையில் நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சாகித், முகமது பாரூக், சிக்கந்தர் அலி, யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாரத்தான் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதில், புகை, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களையும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்றும், உடல் மற்றும் மனநலத்தைப் பேணிப் பாதுகாப்போம் என்றும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, போதையில்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம் என்றும் இறைவனின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, பாலக்கரையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போதைப் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *