கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் மைதானத்தில், ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கால்பந்து சங்கம் இணைந்து நடத்திய ‘கோவை மண்டல ஃபர்ஸ்ட் பிளைண்ட் ஃபுட்பால் டிஸ்கவரி ஃபெஸ்டிவல்’ மற்றும் மாநில அளவிலான பிளைண்ட் ஃபுட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
உள்ளடக்கிய விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 அணிகளிலிருந்து 113 பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையையும், தன்னம்பிக்கையையும், கூட்டு முயற்சியையும் வெளிப்படுத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில், பள்ளி மாணவர் பிரிவில் திருவண்ணாமலை அமலாரக்கினி பள்ளியும், பள்ளி மாணவியர் பிரிவில் திருச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ‘பி’ அணியும், ஆண்கள் பொதுப் பிரிவில் கோவை அணியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தின.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்ட நிறைவு விழாவில், அத்வைத் லக்ஷ்மி குழும இயக்குநர் R. நாகராஜ், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் G. வசந்த ராம குமார், தமிழ்நாடு பார்வை அற்றோர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரசேகர், அத்வைத் லக்ஷ்மி குழுமத்தின் எச்.ஆர் பொது மேலாளர் P. கிருஷ்ணகுமார், தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் செபாஸ்டியன், சி.எஸ்.ஆர் தலைமை திருமதி அனு கிருத்திகா மற்றும் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் இயக்குநர் திருமதி. திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களை வாழ்த்திக் கௌரவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுத் திருவிழா ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.