தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே பிளாட்டினம் கனிம ஆய்வுக்கு எதிர்ப்பு இச்சிப்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்.

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட காதப்புள்ளபட்டி, ருத்ராவதி, மறவபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய வகை கனிமங்கள் இருப்பதாகக் கூறி, மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கனிம ஆய்வுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளால் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கனிம ஆய்வுகளைத் தடுத்து நிறுத்தவும், இத்திட்டத்தைக் கைவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பிளாட்டினம் கனிமச் சுரங்க எதிர்ப்பு இயக்கம் சார்பில் தாராபுரம்-காங்கேயம் சாலையில் உள்ள இச்சிப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த ஈசன் முருகன் சாமி கலந்து கொண்டு பேசினார். மேலும், அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில், பிளாட்டினம் கனிம ஆய்வுத் திட்டத்தை தமிழக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *