தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் பணியாற்றும் 1,254 தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி, அவர்களுடன் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ தீபாவளி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடினார்.
கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம், சின்னமனூர் நகராட்சிகள், உத்தமபாளையம், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் உத்தமபாளையம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினந்தோறும் அதிகாலையிலேயே பணிக்குச் சென்று நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களைத் தூய்மையாகப் பராமரித்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 1,254 தூய்மைப் பணியாளர்களுக்கும் புத்தாடைகளான வேட்டி, சேலைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது பொதுமக்களின் நலனுக்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது. அவர்களும் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன என்று நெகிழ்ச்சியுடன் உருக்கமாக பேசினார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி, அவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய கம்பம் எம் எல் ஏ கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தூய்மைப் பணியாளர்களிடையே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.