உணவு, உடை, உறைவிடம் கடந்து இறைநம்பிக்கையும் மகிழ்ச்சியும் மனித வாழ்வின் அடையாளங்கள் – ஆதீனம் வாழ்த்து தீபாவளி திருநாளை முன்னிட்டு, திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதி தம்பிரான் சுவாமிகள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைக் கடந்து, மகிழ்ச்சி, இறைநம்பிக்கை, வழிபாடு மற்றும் கடமையுணர்வு ஆகியவை வாழ்வின் முக்கிய அங்கங்களாகத் திகழ்கின்றன. இதனைப் பண்டிகைகளும் விழாக்களும் நமக்கு உணர்த்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் அணிவது, பல்வேறு இனிப்புகள் மற்றும் உணவு வகைகளைத் தயாரித்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வது, வானவேடிக்கைகள் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இனிய அனுபவங்களைத் தருகின்றன.
அனைவரது உள்ளங்களிலும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் மலரவும், கற்ற நெறியில் வாழ்ந்து வாழ்வில் நிறைவும் சிறப்பும் பெறவும் இறைவனின் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.