கோவை: ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மனுவில், ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள ‘பழிக்கு பழி இரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்’ என்ற வாசகத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2004-ஆம் ஆண்டில் இதே பெயரில் திரைப்படம் தயாரிக்க முயன்றபோது எதிர்ப்புகள் எழுந்ததால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தற்போது மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சாதிய மோதல்களுக்கும் சமூகப் பதற்றத்துக்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் திரைப்படம் உருவாக்கப்படுவதைத் தடுக்கவும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.