S.முஹம்மது தாரிக் அன்வர்
செய்தியாளர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று (நவ.10) இரவு புனிதக் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதையொட்டி, மாலை நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் நாகூரை வந்தடைந்தது. தொடர்ந்து, நாகூரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் இரவு தர்காவைச் சென்றடைந்தது.
அங்கு ஆண்டகையின் ரவ்லா ஷரீஃபில் பாத்திஹா மற்றும் சிறப்புத் துஆ ஓதப்பட்டதைத் தொடர்ந்து, தர்காவின் பெரிய மினரா மற்றும் வளாகத்தில் அமைந்துள்ள நான்கு மினராக்களிலும் புனிதக் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தர்கா நிர்வாகத்தினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும், நாகை மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-ம் ஆண்டு கந்தூரி விழா பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பரவசமாகத் தொடங்கியது.