மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்றக் கூட்டத்தில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நகைச்சுவை மன்ற உறுப்பினரும், விருதுநகரைச் சேர்ந்தவருமான ஜெயலெட்சுமி அவர்களின் 50-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் ஆகியோர் முன்னிலையில், நகைச்சுவை மன்றத் தலைவர், செயலாளர், பட்டிமன்ற நடுவரும் நடிகரும் பேராசிரியரும் கலைமாமணி விருதுபெற்றவருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள், அமைப்புச் செயலாளர் வி.எம். பாண்டியராஜன் ஆகியோர் நல்லாசி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலெட்சுமி அவர்களின் பொன்விழா திருமண நாளைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அவருக்கு வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கரிசல்பட்டி சுந்தர்ராஜன், பாஸ்கர், கவிஞர் இரா. ரவி, திரைப்பட இயக்குநரும் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர், ஆசிரியர் மோசஸ், ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், பட்டிமன்ற நடுவர் சுகுமாரி, ஆசிரியை சர்மிளா, யோகா கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நகைச்சுவை, நட்பு, அன்பு மற்றும் வாழ்த்துகள் நிறைந்த இந்நிகழ்வு அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியான நினைவாக அமைந்தது.