கடலூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 45,551 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கேக் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,708 பள்ளிகளில் பயிலும் 2,03,022 மாணவர்கள் மற்றும் 13,274 ஆசிரியர்கள் என மொத்தம் 2,16,296 பேருக்கு கேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 2,023 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52,227 குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக நத்தவெளி சாலை அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.