கரூர்: கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 875 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கப்பட்டதுடன், 77,962 மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டன.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப. தலைமையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா முன்னிலையில், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 875 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 83,097 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு கேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 77,962 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 236 மாணவிகள், 265 மாணவர்கள் என மொத்தம் 501 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்துடன் வளர்ந்து, எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. ராஜீ, கரூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *