தென்காசி: கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் லாரியில் கழிவுகளைக் கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிய 4 பேரை தென்காசி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கழிவுகளைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சங்கரன்கோவில் பகுதியில், தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிச் சென்றதாக நிலத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகளைக் கொட்டிய நபர்களை விரைந்து கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் கழிவுகளைக் கொண்டு வந்த ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் திம்மராஜ் (24), கழிவுகளைக் கொட்டுவதற்கான இடத்தைக் காண்பித்த ஆட்கொண்டார்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் முருகன் (45), கழிவுகளை இறக்குவதற்காக வந்த ஆட்கொண்டார்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரனின் மகன் திருமலைச்சாமி (40) மற்றும் புரோக்கராகச் செயல்பட்ட ஆட்கொண்டார்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த குருசாமியின் மகன் முருகன் என்ற வெள்ளத்துரை (55) ஆகிய நான்கு பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.
மேலும், கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து கூறுகையில், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.