தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைப்பாளையம், கொக்கம்பாளையம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி (57) என்பவருக்குச் சொந்தமாக அப்பகுதியில் சுமார் 25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள கம்ப்ரசர் மோட்டாருக்கும் கிணற்றுக்கும் இடையே இணைக்கப்பட்டிருந்த சுமார் 200 மீட்டர் கேபிள் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோல், மேட்டுக்கடையைச் சேர்ந்த அரசகுமரன் என்பவரது தோட்டத்தில் சுமார் 110 மீட்டர் கேபிள் வயர்களும், ருத்ராவதியைச் சேர்ந்த காசிலிங்கம் என்பவரது தோட்டத்தில் சுமார் 100 மீட்டர் கேபிள் வயர்களும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் சுமார் 70 மீட்டர் கேபிள் வயர்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
நான்கு விவசாயிகளின் தோட்டங்களிலும் மொத்தம் சுமார் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான கேபிள் வயர்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து வெங்கடாசலபதி குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் உத்தரவின்படியும், தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மேற்பார்வையிலும், குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மேட்டுக்கடை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருவாரூர் மாவட்டம், கீழ்ப்பனையூரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பாலமுருகன் (24), கோயம்புத்தூர் மாவட்டம், ரங்கசமுத்திரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மதன் (27) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் பயன்படுத்திய TN 50 BT 3078 என்ற பதிவு எண் கொண்ட பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, திருடப்பட்ட கேபிள் வயர்களை வாங்கியதாகக் கூறப்படும் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் டி.கே.டி. மில் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ராமலிங்கம் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நான்கு விவசாயிகளின் தோட்டங்களில் கேபிள் வயர்கள் திருடப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த குண்டடம் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.