400 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – 3 பேர் பலி; 16 பேர் படுகாயம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் சவரிக்காடு அருகே வேன் ஒன்று சுமார் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்ற உறவினர்கள்

பழனி மதினா நகரைச் சேர்ந்த பூ வியாபாரியான முஜிப் ரகுமான் (55) என்பவரின் உறவினர் ஒருவருக்கு கொடைக்கானலில் கடந்த 19.11.2026 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முஜிப் ரகுமான் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேனில் கொடைக்கானல் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அதே வேனில் பழனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 7 மணியளவில் கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் சவரிக்காடு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த சுமார் 400 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

3 பேர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 19 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். பள்ளத்தில் சிக்கியவர்கள் உயிரைக் காப்பாற்றக் கோரி எழுப்பிய அபயக் குரலைக் கேட்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் கொடைக்கானல், பழனி பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பழனி மதினா நகரைச் சேர்ந்த நிஜாமுதீன் (60), பழனியைச் சேர்ந்த சேக்பரீத் (27), அப்பாஸ் (65) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்புப் படையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த முஜிப் ரகுமான், அனீஸ் பாத்திமா (23), அம்ஜித்கான் (29), அசாருதீன் (28), சகிலா (45), யூசுப் (13), சபீனா (42) மற்றும் உடுமலையைச் சேர்ந்த சாஜித் மீரான் (25) உள்ளிட்ட 16 பேர் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அனீஸ் பாத்திமா மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்

விபத்து குறித்த தகவல் பரவியதும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சோகமும் பரபரப்பும் நிலவியது.

இதற்கிடையே பழனி வருவாய் கோட்டாட்சியர் பிரியங்கா, வட்டாட்சியர் சஞ்சய்காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *