திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் பன்னாட்டு ஆடவர் தினத்தையொட்டி அன்பு திருவாளர் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள பேராசிரியர் சுவாமிராஜ் அரங்கில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக கிராமாலயா அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. பிரின்ஸ் மெர்லின் தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர் ஏ.ஜி.ஆர். சத்தியசீலன் பாராட்டுரை வழங்கினர்.விழாவில் கல்வி, சட்டம், மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த ஆளுமைகள் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், கல்வியாளர் விஜயராகவன், சிறுநீரக மருத்துவர் ராஜமோகன், குருதிக்கொடையாளர் மோகன், அன்னதான செயற்பாட்டாளர் ரவீந்திர குமார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களுக்கு உரிய முறையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேய பணியினைப் பாராட்டி கல்லூரி முதல்வர் முனைவர் ஜே.பிரின்ஸ் மெர்லின், துணைமுதல்வர் ஜே.ஜி.ஆர்.சத்தியசீலன் முன்னிலையில் அன்பு திருவாளர் விருது வழங்கினார்.
விருதாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஆதரவற்றவர்கள் மக்கள் கூடும் பேருந்து நிலையம் ,ரயில் நிலையம் திருக்கோவில்கள் முன்பு அதிகமாக காணப்படுவார்கள். ஆதரவற்றவர்களை காக்கும் பொருட்டு தொழில் முறை யாசகர்களை தவிர்த்து உண்மையான ஆதரவற்ற நபர்கள் ஒப்புதலுடன் சரக காவல்நிலையத்தில் தகவல் அளித்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். பொது இடங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்கள் உயிர் வாழ யாசகம் பெற்று கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி வருவர்.
உற்றார் உறவினர் இன்றி சுற்றி திரிபவர்கள் உடல்நலம் குன்றியோ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை சரக காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனை அமரர் அறையில் வைப்பர்.தொடர்ந்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொள்வர். மேலும் இறந்த நபர் உறவினரை கண்டறிய இறந்த நபர் நிறம், உயரம், இனம், அங்க அடையாளம், ஆடைகள் குறித்த தகவலுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க விளம்பரம் செய்வார்கள். இறப்பின் தன்மை அறிய உடற்கூராய்வு செய்வார்கள்.
மேற்கண்ட முயற்சிக்குப் பிறகு பிரேதத்தை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் சரக காவல்துறையினர் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் எங்களிடம் தகவல் அளிப்பார்கள் தகவலின் அடிப்படையில் சரக காவல்துறையினர் முன்னிலையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறோம். இல்லத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் யாரையும் கைவிட்டுவிடாதீர்கள் . அவர்களுக்கு ஆதரவு தான் தேவை என வேண்டுகோள் விடுத்தார். முனைவர் கோபிநாத் நிகழ்வினை தொகுக்க, நிறைவாக வணிகவியல் துறை உதவி பேராசிரியர் செந்தில் குமார் நன்றிக்கூறினார்.