தென்காசி மாவட்டம், கடையநல்லூர்:
கடையநல்லூரில் உள்ள முக்கிய பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில், இந்திய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கடையநல்லூர் கிளை சார்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிவிப்பு பலகை பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், “இங்கு கிழிந்த, ஒட்டு போட்ட, ஆயில் மற்றும் மை பட்ட, தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள சூழலில், வங்கி கிளையின் பெயரில் இவ்வாறு அறிவிப்பு வைக்கப்பட்டிருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு உதவ வேண்டிய வங்கியின் பெயரில் இதுபோன்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருப்பது அரசின் வழிகாட்டுதல்களுக்கும் பொதுமக்களின் நலனுக்கும் முரணானதாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அறிவிப்பு பலகையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட SBI வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கியின் பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு உண்மையிலேயே வங்கி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புதானா? அல்லது பெட்ரோல் நிலைய நிர்வாகத்தின் அறிவிப்பா? என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பார்களா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.