தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். இதை தொடர்ந்து அந்த யானை கடந்த மாதம் 22-ந்தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர் கோவை பேரூர் தேவிசிறை அணைக்கட்டு பகுதியில் நின்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்தில் கொண்டு விட்டனர். ஆனால் ஒரு வார காலத்திற்கு பிறகு மக்னா யானை அங்கிருந்து டாப்சிலிப் வழியாக சேத்துமடை வனப்பகுதிக்கு வந்தது. இதற்கிடையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலர் பழுதானதால் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினரால் கண்காணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்னை, மா மரம், பந்தல் காய்கறிகளை மக்னா யானை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகள், வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து மக்னா யானையை பிடிக்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே சுற்றித்திரிந்த மக்னா யானையை வனத்துறை ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், கும்கி யானை கபில் தேவ் உதவியுடன் மக்னா யானை லாரியில் ஏற்றப்பட்டது. இந்நிலையில் பிடிபட்ட மக்னா யானையை எங்கு விடுவது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய யானை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *