நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர் அருகே மேல் கூடலூர், கெவிப்பாறை, நந்தட்டி பகுதிகளில் மீண்டும் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய பல்வேறு பகுதிகளிலும் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாய பயிர்கள் சேதம் அடைவதோடு மக்கள் நடமாட்டத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

காட்டு யானைகளை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர், அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் மீண்டும் மீண்டும் யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது.

மேல் கூடலூர் கேகே நகர் எதிர்புறம் ஊட்டி-கூடலூர் சாலையின் மேல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் விடுதிகளை ஒட்டி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று நடமாடி உள்ளது. இப்பகுதியில் இருந்து இந்த யானையை வனத்துறையினர் விரட்டியுள்ளனர்.

மீண்டும் இந்த யானை நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் கூடலூர்-ஓவேலி சாலையில் வனத்துறை சோதனைச்சாவடியை ஒட்டிய கெவிபாறை குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது.இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து கோக்கால் மலை பகுதிக்கு விரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கூடலூர்-கள்ளிக்கோட்டை சாலை வழியாக வந்த ஒற்றை யானை நந்தட்டி மாதேஸ்வரன் கோயிலை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி உள்ளது. இந்த சாலையில் அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர் யானை நடமாட்டம் அறிந்து அலறியடித்து ஓடி உள்ளனர்.

பலாப்பழங்களை தேடி வழக்கமாக வரும் இடங்களுக்கு இந்த யானை வரலாம் என்பதால் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என்றும், முடிந்தவரை அந்த நேரங்களில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், யானைகள் நடமாடும் பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அதனை விரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *