நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
உயிரியல் அறிவியலின் எல்லைகளில் சமீபத்திய வளர்ச்சி என்னும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இப் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு தைவான், சீனா முதலான வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்தனர்
இக்கருத்தரங்கிற்கு வந்த அனைவரையும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் க. சர்மிளா பானு வரவேற்றுப் பேசினார்
கல்லூரி முதல்வர் முனைவர் மா. கோவிந்தராசு தலைமை உரை ஆற்றினார் இக்கருத்தரங்கத்தில் 270 ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் நூலாக வெளியிடப்பட்டது.
தைவான் நாட்டு பேராசிரியர் முனைவர் ஜியாங் சூ வாங் பேசும்போது உயிரியல் அறிவியலில் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகளும், அந்த வளர்ச்சியை பற்றிய ஆய்வுகளும் வளர்ந்து கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மாணவர்கள் தைவான் நாட்டில் வந்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு இருப்பிடம், உணவு முதலானவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும் கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகின்றன.
முனைவர் பட்டம் முடிப்பதற்குள் நான்கு ஆய்வு கட்டுரைகளை அவசியம் எழுதி ஒப்படைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும். ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் என்னை அணுகினால் உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் உதவிகளையும் நான் அவசியம் வழங்குவேன்
ஆய்வாளர்கள் முனைவர் பட்ட ஆய்வினை செய்யுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் விலங்கியல் துறைத் தலைவரைப் போல முதுமுனைவர் ஆய்வினை மேற்கொள்ளுங்கள் என்று ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தினார்.
இக்கருத்தரங்கத்தில் சீன நாட்டு அறிவியலாளர் பிருத்திவிராஜ் நாகராஜன், பேராசிரியர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைய வழியில் கருத்தரங்க உரையினை ஆற்றினார்கள்.
ஆய்வாளர்கள் மூன்று அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கிய 9 ஆய்வாளர்களுக்கு நிறைவு விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் புகழேந்தி, விஞ்ஞானி சக்திவேல், பேராசிரியர் ராமகிருஷ்ண நாயக் ஆகியோர் கருத்தரங்க நிகழ்வின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசினார்கள்.
பின்னூட்டக் கருத்தாக கர்நாடக மாநிலம் தும்கூரைச் சார்ந்த சூரஜ், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி லோபிகா ஆகியோர் பேசினார்கள்.