அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி. 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 150 – ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 5,07,425 ஆகும்.

01.01.2024 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2024-ஆம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. மேலும் பேரணியில் கலந்து கொண்ட சுமார் 100 மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *