அகத்தீ !

நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி !

நெய்தல் பதிப்பகம், 4, செங்கேணியம்மன் கோவில் வீதி,
சோலை நகர், முத்தியால் பேட்டை, புதுச்சேரி 605 003.
32 பக்கங்கள் விலை ரூபாய் 50.

**
அகத்தீ பெயரே வித்தியாசமாக உள்ளது. அகத்தில் உள்ள தீயை கவிதையாக வடித்துள்ளார். நூல் ஆசிரியர் கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி. இந்த நல்ல நூலை இனிய நண்பர் கவிஞர் பவ கணேஷ் அவர்கள் எனக்கு விமர்சனத்திற்காக அனுப்பி இருந்தார் அவருக்கு நன்றி.

 பாரதியின் புகழ் பெற்ற வைர வரிகளைக் கொண்டு கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுகள்.  பல்வேறு விருதுகள் பெற்றுள்ள நூலாசிரியர் பெண்ணியம் பேசுகிறேன் என்ற கவிதை நூல் எழுதியதன் காரணமாக பெயரோடு ' பெண்ணியம் ' என்ற சொல்லும் சேர்ந்து விட்டது. மகாகவி பாரதியார் புதுவையில் சில காலம் வாழ்ந்த காரணத்தால் பாரதியின் தாக்கம் புதுவைக்காரர்களுக்கு நிறைய உண்டு.  அதனை மெய்பிக்கும் விதமாக நூல் உள்ளது.

 முதல் கவிதையிலேயே பாரதியைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார்.

 பாரதி !

பாரதி என் பாரதி
அச்சமிலாச் சொற்களைத்
துச்சமெனக் கோர்த்ததால்
எத்திசையிலும் அடித்து நொறுக்கும்
உன் உன்னத கவி வரிகள்
மிளிரும் நட்சத்திரங்களுடனும்
ரௌத்திரம் பழகுகின்றன .
வானத்துக் கரும் பறவைகள்
உன் முறுக்கேறிய மீசையென
வானம் நான்!
ஆகவே நானும் பாரதியே!

 உண்மை தான். பாரதி என்ற சொல் மட்டுமல்ல நிலா, சந்திரன் என இருபாலருக்கும் பெயராவது போல பாரதி என்று இருபாலருக்கும் பெயர் உண்டு, அன்று தமிழ் வழியில் பயின்ற அப்துல்கலாம் அவர்கள் உலகம் போற்றும் வண்ணம் சாதனைகள் புரிந்தார்கள்.  ஆனால் இன்று ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடும் அவலத்தை உணர்த்திடும் வண்ணம் ஒரு கவிதை இதோ!

வீணை கெட!

நல்லதோர் வீணை செய்து/அதை நலம் கெட
கருத்திறுக டைக்கட்டி
கால் புருங்க ஷீ மாட்டி
ரௌத்திரம் அறுக்க நையப்புடைத்து
மூத்திரம் அடக்க விதி வைத்து
நோய்த் தொற்றுக்கு ஆளாகி அல்லலுற
ஐயே! தனியார் பள்ளிதோறும்
புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடா பாரதி !

 பாரதியின் புகழ் பெற்ற வைர வரிகளை வைத்தே இன்றைய சூழ்நிலையில் உள்ள நிகழ்வுகளை பொருத்தி கவிதையாக்கி இருப்பது சிறப்பு.

 கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை காக்கை குருவிகளுக்கு இட்டு, பசியாற வைத்து, காக்கை குருவி எங்கள் சாதியெனக் கவி பாடிய பாரதிக்கு அவரது செல்ல மனைவி செல்லம்மாள் எழுதுவது போல ஒரு கவிதை மிக நன்று.

 அமுத சுரபி!

 பாரதிக்கு! அன்பு செல்லம்மா எழுதுவது
 உலகோர் பசிக்காக! நீயழுதாய் நடு இரவில் 
 நானும் அழுதேன்
 நீ பசிக்கக் கண்டு
 பசிப்பிணியாற்றும் 
 அமுத சுரபி 
 நம் கையில் இல்லை 
 அப்போது,   விடுதலையையும் 
 வறுமையையும்! நன்றாகப்
 பற்றியிருந்தோம் 
 ஆயினும்! இன்று உன் கவிதைகள் 
 தமிழின் அமுதசுரபி 
 எல்லோரும் உண்ண.

உண்மை தான். மகாகவி பாரதியார் கவிதைகள் அமுதசுரபி தான். அள்ள அள்ள அன்னம் வருவது அமுத சுரபி. படிக்கப் படிக்க பரவசமும் ,சொல் ஞானமும் வரவைப்பது பாரதியார் கவிதைகள்.
பேரழகின் அழகு!

பாரதி!
வானத்து நிலவு அழகா?
வையத்து பசுமை அழகா?
காவிய இன்பம் அழகா?
இல்லை இல்லை!
நாமே பேரழகு எல்லாம் புனைத்தபடி கவிந்த
காலத்தின் பேரழகு நாம் !

நாமே அழகு என்று கவிதைகளில் தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பாராட்டுகள். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனக்குத் தானே அழகு என்று கருத வேண்டும். இந்த உலகில் அசிங்கம் என்று எதுவுமே இல்லை என்பதே உண்மை.

விடாமல் விடுதலையாகி!

 பாரதி!
 ஒரு சிட்டுவைப் போல/ வானில் பறக்க ஆசையுண்டு   ஆனால்      கனம் நிறைந்த
 காற்றின் துயரங்களுடன்
     என் இரு இறகுகள்.
 அதை எங்கே அவிழ்தெறிவேன்? 
     எப்படி விட்டு விடுதலையாவேன்?
 ஆனாலும் பறக்கிறேன்           
    சிறைகளைச் சுமந்தபடி!

 நூலாசிரியர் பெண்ணியம் செல்வ குமாரி அவர்கள் பெயரிலேயே பெண்ணியம் பெற்று இருப்பதால் கவிதையிலும் பெண்ணியம் பாடி உள்ளார்.  ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதே உண்மை. இன்றைக்கும் பெரும்பாலான இல்லங்களில் பெண் பெரிய பதவியில் இருந்தாலும் பணிபுரிந்தாலும் இல்லத்தில், சமையலறையில் பெண்ணே பணி புரிந்து வருகின்றாள். 

ஆண்கள் சிறு பகுதி பணியைக் கூட ஏற்று செய்திட மனமில்லை. இந்நிலை மாற வேண்டும். பணிகளை இல்லத்திலும் பகிர்ந்து செய்யும் பண்பு எல்லா ஆண்களுக்கு வர வேண்டும். அப்போது தான் பாரதி ஆண்ட பெண் விடுதலை முழுமையாக அடைந்தோம் என பொருள் கொள்ள முடியும். இக்கவிதையில்! “ஆனாலும் பறக்கிறேன் சிறகுகளைச் சுமந்தபடி” என்ற முடிப்பு முத்தாய்ப்பு பொருள்கள் உணர்த்தும் வைரவரிகள்.

   புதுப்பாதை படை!

 காற்றின் வெளியிடையில்
   கண்ணம்மாக்கள் 
     புதுவழி தேடிப் புறப்படுகின்றனர்.
   பாதம் அறுக்கும் முட்கள்          
 இரத்தம் கசியும் வழிகளோடு...
    பயண நெடுகிலும்

எட்டும் அறிவினில் பெண்
இளைப்பில்லை என்று கும்மியடித்தபடி
புதுப்பாதை எட்டுத்திக்கும்
பெண்ணிய தோரணையோடு
சிந்தும் வலிகளில் பூக்கட்டும்!

இன்றைய பெண்களின் மனவலியை குறேலை எடுத்துக் கூறும் விதமாக குறுகிய அளவு சொற்களின் மூலம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.

இஸ்டிஸம்!

 நான் FEMINIST 
 நான் PERIYARIST 
நான் COMMUNIST
 என எந்த ‘ist’ல் 
 வேண்டுமானாலும்
 என்னை அடையாளப்-படுத்துங்கள்.
 அப்படியே HUMANIST 
 என்ற அழைத்தால் 
 கொஞ்சம் பெருமிதத்தோடு 
 கர்வம் கொள்வேன். 

மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும் நல்ல கவிதை பாராட்டுகள். வருங்காலங்களில் ஆங்கிலச்-சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள். தமிழை ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் நேசிப்பவர்கள் புதுவைத் தமிழர்கள்! அதன் காரணமாக இவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. நீங்களும் புதுவையைச் சேர்ந்தவர்கள். பாராட்டுகள்.

 அகத்தீ நூல் படித்தால் பாரதி பற்றிய ‘அக்னிக்குஞ்சு’ அகத்தில் பற்றிக் கொள்ளும் பாரதியின் பிம்பத்தை உயர்த்தும் விதமாகவும் சமகால உணர்வுகளை உணர்த்தும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.  பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *