நீ நான் நிலா !

நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படம் அற்புதம் . நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி சிங்காரச் சென்னையில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணான
மயிலாடுதுறையை மறக்காதவர் .தன் பெயரோடு மயிலாடுதுறையை இணைத்துக் கொண்டவர் .கவிஒவியா என்ற மாத இதழின் ஆசிரியர் .மாத இதழை ஒவ்வொரு இதழையும் மாதாமாதம் வெளியீட்டு விழா வைத்து வெளியிட்டு வரும் சாதனையாளர் .மகா கவி பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் போல இவரது மனைவி விழாக்களை முன் நடத்துபவர் .சென்ற மாதம் நானும் இந்த விழாவில் பங்குப் பெற்றேன் . விஞ்ஞானி நெல்லை சு .முத்து அவர்களும் கலந்து கொண்டார்கள் .

ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கக் கூ டிய, துடிப்பு மிக்க இளைஞர் கவிஞர் கன்னிகோயில் ராஜா அவர்களின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது . தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு பலர் அடிமையாகி வரும் அவலத்தைச் சுட்டும் விதமாக ஒருஹைக்கூ.

அடுத்த வீடு
அந்நியப்படுகிறது
தொடரும் தொடர்கள்

தீயிற்கும் ,மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்கு வழங்குங்கள் .என்று விழிதானம் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

தின்னக் கொடுக்காதே !
தீயிற்கும் மண்ணுக்கும்
ஒளியாகும் விழி !

மக்களிடம் உள்ள மூட நம்பிக்கை நீங்கி ,எல்லோரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் .ஒருவர் தரும் விழிகள்தானம், பார்வையற்ற இருவருக்கு பார்வையாகும் என்பதை உணர வேண்டும் .விழிகள் தானம் படிவம் தந்து விடவேண்டும் .இறந்த உடன் உறவினர்கள் கண் வங்கி மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும் .

நமது நாட்டில் அரசு நடத்தவேண்டிய கல்வித்துறை தனியார் வசம் ,தனியார் நடத்தும் மதுக் கடைகள் அரசு வசம் .அரசு பார் என்று விளம்பரப் பலகைகள் .கூடுதல் நேரங்கள் விற்பனை .இந்த விசித்திரப் பொருளாதாரம் பற்றி ,அவலம் பற்றி ஒரு ஹைக்கூ .

தெருவுக்குத் தெரு
புதைகுழிகள்
மக்களை விழுங்கும் மது !

நன்றாக எழுதக் கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆற்றலை வெளிப்படுத்தாமல் போகும் படைப்பாளிகள் பற்றியும் ஒரு ஹைக்கூ .

குடும்ப சூழல்
நிறுத்தி வைக்கிறது
பலரின் இலக்கியப் பயணத்தை !

காதலைப் பாடாமல் ஒரு கவிஞர் இருக்க முடியமா ? நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதியும் காதலை பாடி உள்ளார் .

பிரியம் என்பது
உயிர்வதை தானோ ?
கலங்கும் காதல் !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த மாமனிதர் , பகுத்தறிவுப் பகலவன் ,வெண்தாடி வேந்தன் ,தந்தை பெரியார் பற்றி ஹைக்கூ .

சாதித் தீ பொசுக்கிய
வெண்தாடி
பெரியார் !

மதிய உணவில் ,சத்துணவில் சாப்பிட்டு கல்விக் கற்று உயிர் பதவியல் உள்ளனர் .கொடிதிலும் கொடிது வறுமை .ஏழை எளிய மக்களுக்கு ஆறுதல் சத்துணவு .ஏழை மழலைகளின் மனதைப் படம் பிடிக்கும் ஹைக்கூ ..

தொடர் மழை
பள்ளி விடுமுறை
பசியுடன் மாணவன் !

சில இளைஞர்கள் படித்து இருந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்வது இல்லை .நிகழ்வைக் காட்சிப் படுத்தி புத்திப் புகட்டுகிறார் .

கூ ட்ட நெரிசல்
தடுமாறும் முதியவர்
இருக்கையில் இளைஞர்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற குடிமகனின் வேதனையை உணர்த்தும் கவிதை .

வளர்ச்சிப் பாதையில்
தமிழகம்
தொடரும் மின்வெட்டு !

காதல்உணர்வு அனைவருக்கும் உண்டு .ஒருதலைக் காதலாவது மனதிற்குள் ஒரு முறையாவது மலர்ந்து இருக்கும் .மலரும் நினைவை மலர்விக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

தொலைந்து போனேன்
உன்னிடம்
ஒரு நிலாப் பொழுதில் !

நூலின் தலைப்பிற்கான ஹைக்கூ இறுதியாக இடம் பெற்றுள்ளது .

நிசப்த வேளை
கவிதை பிறக்கும்
நீ நான் நிலா

இப்படி பல்வேறு ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகர்களின் மன உணர்வைஉணர்த்தும் விதமாக உள்ளது.ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *