நிறுவனர் : முத்தமிழ் அறக்கட்டளை
பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு,
சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
தொ.பெ. எண் : 2533524
செல்போன் : 94427 43524

 ஹைக்கூ திலகமென செல்லமாக... செல்வமாக அழைக்கப்படும் கவிஞர் இரா. இரவி, “வெளிச்ச விதைகள்” என்ற கவிதை நூலில், அன்றைய சமுதாய நிலையையும், இன்றைய சமூக அவலங்களையும் அலசி, ஆராய்ந்து, ஈரடியில் உலகளந்துள்ளார்.

  “உயிரும் மெய்யும், உயிர் மெய்யும் இணைந்த
  உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் “அம்மா!”
        தாய்மைச் சிறப்பின் சிகரம்.
  “நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை
  நன்மை தீமை எடுத்து இயம்புயவர் தந்தை”
        தந்தை உறவுக்கு மகுடம்.
  “கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல் மிக்கவர்
  கண்களின் காட்சிக்கு இனிமை தருபவள்”
        இல்லத்தரசிகளுக்கு நல்ல இனிப்புச் சுவை
  “பென்ணிலா வீடு வீடல்ல காடு
  பெண்ணே இருளகற்றும் விளக்கு”
        விளக்கு வெளிச்சத்தில் பெண்ணின் பெருமை.
  “இன்று முதல் இணையும் இணைகள் இவர்கள்
  என்று உலகிற்கும் அறிவிக்கும் அற்புத நாள்”
        திருமணம் நறுமணம் வீசுகிறது.
  “நிழலின் பெருமை வெயிலில் தெரியும்
  நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும்”
        பெற்றவர் பெருமைக்கு ஒரு ‘கொடை’
  “பண்மொழி அறிஞர் பாரதியார் போற்றிய தமிழ்
  பண் இசைத்து பாடல்கள் தந்திட்ட தமிழ்”
        பாரதீயம் சாரதீயம் செய்கிறது, தமிழ்த்தேரில்.
  “உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும்
  தமிழ் உள்ளவரை தமிழன் புகழ் நிலைக்கும்”
        “தமிழ்” - உலகம் சுற்றும் வாலிபன்.
  “பாடாத பொருளில்லை எனப் பாடினான்!
  பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான்!” 
        வள்ளுவரின் நெறி உலகெங்கும் குரல் கொடுக்கிறது.
  “கவனத்தை, கண்டதில் சிதற விடாமல்
  கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்”
        தன்னம்பிக்கையான கவன ஈர்ப்புத் தீர்மானம்.
  “காகிதத்தில் உள்ள எழுத்துக்களை வாசிப்பது
  குழந்தைகளின் சிரிப்புப் போல இனிமையானது”
        காகித எழுத்துக்களின் சிறப்பு - குழந்தைகளின் சிரிப்பு
  “இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
  எல்லா நாட்டுக்காரனும் ஆள்கிறான் இன்று” 
        ஆளவைத்த இளிச்சவாயர்களுக்கு புத்திக் கொள்முதல்
  “கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
  கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை”
        காதல் நெறி, கலை – காம வெறி, கொலை.
  “பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
  புத்தி கெட்ட மனிதர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்”
        மறுபிறவி இல்லையென்ற துணிவில்,
        நம் அறிவு அடமானப்       பொருளாகி விட்டது.
  “கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை
  கிடைக்காத வேலையில் மீது ஏக்கம் உண்டு”
        வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு படிப்பினை.
  “கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது
  கேரளமோ முல்லைப் பெரியாற்றில் உயர்த்திடத் தடுக்கிறது”
        நம்பாதீர் அண்டை மாநிலத்தை.
        நம்புங்கள் மையம் கொள்ளும் புயலை. 
        மழை மையல் கொண்டாவது பெய்யும்.
  “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில்
  சங்கம் வைத்துச் சாதி வெறி வளர்க்கும் அவலம்”
        சாதியின் நீதி? வீதிக்கொரு சாதிக் கட்சிக் கொடி!
  “காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை
  காதல் முக்காலமும் எக்காலமும் வாழும்”
        காதல் வாழும் - காதலர்கள் வாழமாட்டார்களே! ?
  “மாமனிதர் அப்துல்கலாம் அவர்களே
  என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர்”
        அரசு அவரை உரசிப் பார்த்து,
        சலாம் போட்டு மறந்துவிட்டார்களே!.
  “காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
  காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார்”
        காந்தி படம் – சிரித்தபடி - காகிதத்தில்!

  பெற்றுத்தந்த சுதந்திர நாட்டின் எதிர்கால கோமாளித்தனங்களை எண்ணியா? அல்லது ஒன்றிரண்டு காகிதத்தில் செல்லாமல் போய் விட்டதின் வேதனையா? அழுதுகொண்டே சிரிக்கிறாரா? – சிரித்துக் கொண்டே அழுகிறாரா? யாருக்குத் தெரியும்!.

  “இனியாவது பெண்களை அனைவரும் மதித்து நடப்போம்    இனியவர்களின் திறமை வெளிப்பட வாய்ப்பளிப்போம்”
        விளையாட்டு வீரப் பெண்மணிகளுக்கும்,
        நெறிதவறாது வாழும் பெண்மணிக்கும் மட்டுமே
        இது பொருந்தும்.
  “தமிழன் என்று சொல்லடா தங்கவேலு மாரியப்பா
  தலை நிமிர்ந்து நில்லடா தங்கவேலு மாரியப்பா!”
        ஊனம் என்ற சொல்லை ஊனமாக்கிய
        தங்கமான தங்கவேலு மாரியப்பா!
        தமிழினத்தையே நிமிரச் செய்த தங்கமே! நிமிர்ந்து நில்!.
  “நவில்தொறும் நூல் நயம் போலும், பயில் தொறும்
  பண்புடையாளர் தொடர்பு”

  வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப கவிஞர் இரா. இரவியின் நண்பன் “நான்” என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
  “இவரின் வெளிச்ச விதைகள்” கவிதை நூலுக்கு விமர்சனமாக, சத்தான கருத்து விதைகளை நீருள்ள, இயற்கை உரமிட்ட, சூரிய வெளிச்சமுள்ள பூமியில் விதைத்துள்ளேன். நல்ல மகசூல் நிச்சயம் கிடைக்கும்.  உங்களுக்கும் பலனில் பங்கு வேண்டுமானால், உழைக்க வேண்டாமா? உழைப்பு என்பது “வெளிச்ச விதைகளைப்” படிப்பதே!.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *