ஹைக்கூ உலா !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை : கலைமாமணி ஏர்வாடியார் !

கவிதை உறவு, 420-E, மலர் காலனி,
அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.

வெளியீடு :

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.

தொலைபேசி : 044 24342810, 24310769

மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

விலை : ரூ. 80.

**

  நிறைய எழுதுவது தான் நிறைவென்பதில்லை.  குறைவாக எழுதியும் நிறைவைத் தர முடியும் என்பதற்கான முதல் எடுத்துக்காட்டு குறள். வரிவரியாக எழுதியும் புலப்படாதவற்றை வைர வரிகளாகத் தந்து வான்புகழ் பெற்றவர் திருவள்ளுவர். நீண்ட பாடல்கள், காப்பியங்கள், காவியங்கள் என்று வளர்ந்த கவிதைகளுக்கூடே மொட்டாகி மலர்ந்து மூன்றே இதழ்களாய் முறுவலிக்கிற வடிவமே ஹைக்கூ. 

சுருக்கமாகவும் நறுக்கென்றும் சொல்லிச் சென்றதில் இந்த அவசர உலகில் உடனை ஈர்ப்பைப் பெற்றவை ஹைக்கூ. சுருக்கமாகவும் நறுக்கென்றும் சொல்லிச் சென்றதில் இந்த அவசர உலகில் உடனடி ஈர்ப்பைப் பெற்றவை ஹைக்கூ கவிதையே. சரியாக அவ்வடிவத்தைப் பயின்று படைத்துப் புகழ்பெற்றிலங்குகிறவர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.

இரவி என்ற பெயருக்கு முன்னால் ஹைக்கூ திலகம் என்று ஒரு புகழும் உண்டு. ஆகப் பேரோடும் புகழோடும் வாழ்கிற இக்கவிஞரின் இத்தொகுப்பு சுவையாகவும் சிலிர்ப்பாகவும் சிந்தனையில் நிறைவதாகவும் இருக்கிறது. 29 பெருந்தலைப்புகளில் ஹைக்கூப் பூக்கள் இத்தொகுப்பில் மலர்ந்து மணம் வீசுகின்றன.

“கைரேகையில் இல்லை

கைகளில் உள்ளது !

எதிர்காலம் !

நூலைத் திறந்ததுமே நம்பிக்கைக்குரிய இவ்வரிகள் நம் நெஞ்சில் நங்கூரமிட்டு விடுகின்றன.

“முயற்சி செய் நூறு முறை ;

பத்து முறை

வெல்ல”

என்ற வரிகள் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள். மொழி குறித்த இரவியின் சிந்தனைகள் மேன்மையானவை.

“முதல்மொழி மட்டுமல்ல;

முதன்மையான மொழில்

தமிழ்”.

எல்லோர்க்கும் தெரியும் தான். ஆனால் இவரும் சொல்வது ‘இந்நினைவகற்றாதீர்’ என்பதை இடித்துரைக்கத் தான். இலை விழுவது இயற்கை தான். அதிலும் ஓர் அழகு இரவி எழுதப் பிறக்கிறது.

“பிரிய மனமில்லை

பிரித்தது காற்று

மரத்திலிருந்து இலை”.

மது அருந்துவது தீது, தவறு என்றால், அதை விற்பது அதனினும் தீதானது. அரசே அதைச் செய்கிறதே என்கிற ஆற்றாமை எல்லோர்க்கும் உண்டு. இதை

“வருமானம் அல்ல,

அவமானம்

மதுக்கடை”

என்று அறைகிறார் கவிஞர் இரவி. ஜல்லிக்கட்டு சமகாலக் கவலை ; போராட்டமும் கூட. இரவி இதை எப்படிப் பார்க்கிறார்? யாரும் தலைவனென்று எழாமல் நிகழ்ந்த புதுமைப் போராட்டம் என்றாலும், தலைமைத் தாங்கியது தமிழ் என்கிற பார்வை பாராட்டிற்குரியது. இனிமேல் நமக்குத் தலைவர்கள் தேவையில்லை. தமிழே போதும்,

“தலைவன் இல்லாத

போராட்டம் அல்ல,

தமிழே தலைவன்”

என்கிற வரிகள் அருமை. ஓநாய்களாலே நிரம்பி வழிகிறது நாடு. இதை நம்பலாமா… சைவம் என்கிறது ஓநாய்!” சிந்திக்க வைக்கிற வரிகள். இப்படி ஒவ்வொரு கவிதையிலும் நிகழ்காலம் இருக்கிறது என்பதால் படிக்கும்போதே நம்மெதிரே நடக்கும் காட்சிகள் படப்பதிவாகவெ மீண்டும் திரையிடப்படுவது போலிருக்கிறது.

“இறுதியில் வெல்லும் சரி ;

இடையில்ல் ஏன் தோற்கிறது

தர்மம்?”

இதை எதற்கும் பொருத்திப் பார்க்கலாம். மழை வருகிறது போகிறது. மண்ணை நனைத்து விட்டுப் போகிற மழை நம்மை ஏதாவது நினைக்க வைக்கிறதென்றால், அது வெள்ளக் காடாக விழுந்து விரிகிறபோது தான். இதை அழகாகச் சொல்வது சமூகப் பார்வையோடு சொல்வது எப்படி என்றால் இப்படித்தான். “செத்துப் போனது சாதிமத பேதம் மழை வெள்ளம்”. மொழிப்புலமை, வார்த்தை வளம், சமூக அக்கறை, பார்வை, புரிதல்கள் இருப்பவர்க்கே இதுபோன்று சிந்திப்பது சாத்தியம். நண்பர் ரவி அவர்களுக்கு இது சாத்தியாமாயிருக்கிறது. இதுவே அவரது கவிஞர் இரவியின் வெற்றி. அவரைப் பாராட்டி மகிழத் தோன்றுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *