வலங்கைமானில் 75 ஆண்டு பழமையான சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் ரூபாய் 1.37 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடந்த 1947 -ம் ஆண்டு முதல் வடக்கு அக்ரஹாரம் பகுதியில், கிழக்கே கீழ விடையல் வருவாய் கிராமம், மேற்கு ஆவூர் வருவாய் கிராமம், தெற்கே ஆலங்குடி வருவாய் கிராமத்தை உள்ளடக்கி வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஆதிச்சமங்கலம், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், தொழுவூர், செம்மங்குடி, மேலவிடையல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். மிகப் பழமையான கட்டிடத்தில் சுமார் கடந்த 75 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, சேதமான கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது.

சேதமான பழமையான கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நன்னிலம் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டத்தின் கீழ் ரூபாய் 1.37 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதை அடுத்து அதற்கான பூமி பூஜை வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. உதவி செயற் பொறியாளர் சிவகுமார், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, குடவாசல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வலங்கைமான் திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், வலங்கைமான் பத்திரப்பதிவு சார்பதிவாளர் புவனேஸ்வரி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆவூர் அன்பு பிரபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *