கவியமுதம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை
thirugeetha@gmail.com

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in

வாசிப்போரை வசீகரிக்கும் கவியமுதம்

கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய “கவியமுதம்” கவிதை நூலை வாசித்து முடித்தபோது சமூக யாத்திரை மேற்கொண்ட உணர்வு. நிகழ்கால நிஜங்களின் நிதர்சனத்தைக் காணமுடிந்தது.

நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி (ஒரு நத்தையால் மூன்றாண்டுகள் தூங்கமுடியும். என்னவளே நீ என்னோடு இருந்தால் என்னாலும் முடியும்), பெண்ணின் பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூகச் சித்திரிப்பு (வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் வால்முளைக்காத குரங்கு வர உள்ளது) உணர்ச்சி ஊர்வலம் (படிவங்கள் நிறைவு செய்யும்போது பார்த்தால் நிரந்தரமுகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும்) என்ற தலைப்புகளின் கீழ் தோழர் இரா. இரவி வடித்திருக்கும் கவிதைகள் வாசித்தவுடன் மனதை வருடவும் செய்கிறது. நெகிழவும் வைக்கிறது. நம்பிக்கையையும் தருகிறது. காதல் உணர்வை சுவாசிக்கவும் வைக்கிறது,

கவிதையென்பது ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பு. அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது, அறிவுக்குத் துணையாக கற்பனையைக் கொண்டிருப்பது என்பது ஜான்ஸன் என்பாரின் கூற்று. ”இசை தழுவிய எண்ணமே கவிதை”.என்று கார்லைல் என்பார் வரையறுக்கின்றார். ”மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்டவல்லதும் செம்மை நிறைந்த கூற்றே கவிதையாகும்” இது மாத்யூ அர்னால்டு கவிதைக்குக் கூறும் இலக்கணம். இவையனைத்தும் தோழர் இரா. இரவி அவர்களின் கவிதைகளில் காணமுடிகிறது.

ஹைகூ திலகமாக திகழும் இவர் இன்றைக்கு நீண்ட கவிதைகள் மூலம் சமூகத்தைப் பார்த்திருக்கிறார். ஹைகூ எப்படி இருக்க வேண்டும்? ஹைகூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் ‘ஜப்பானியக் கவிதை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,

“சமீபத்திலே மார்டன் ரிவ்யூ என்ற கல்கத்தா பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வது என்னவென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக்கவிதை சிறந்தது. காரணமென்ன?”

“ஜப்பானிய கவிதையில் வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய், இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி.” என்கிறார். தோழர் இரா. இரவி அவர்கள் இயற்கையுடனும் சமூகத்துடனும் ஒன்றிய கவி. அதனால்தான் அவரிடமிருந்து வந்திருக்கிறது கவியமுதம்.

வாசிக்கவும், சமூகத்தின் முகத்தை அறியவும் உதவும் கண்ணாடி இந்த கவிதை நூல். வாசிக்க வாய்ப்பளித்த கவிஞர் இரவி அவர்களுக்கு வாழ்த்துகள். வாசியுங்கள் நீங்களும் உணர்வீர்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *