நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி ஆகியவைகளை ஆன்லைன் மூலம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சி.ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி, த.ஐயப்பன், மேனாள் மாவட்டப் பொருளாளர் அ.ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ரெ.ஈவேரா கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு போராட்ட நாட்களை தகுதி வாய்ந்த விடுப்புகளில் ஈடு செய்வது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீதான இந்த அணுகுமுறை அவர்களது அடிப்படை பொருளாதார தேவைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே விடுப்புகளால் ஈடு செய்வது என்ற நடைமுறையை மாற்றி, போராட்டக் காலத்தை வேலை நாளாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ கைவிடும் வரை நிரவல் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை என்ற அரசாணை 243ஐ ரத்து செய்வதோடு, நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான முன்னுரிமை வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

கிராமப்புற தனியார் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை, நகர்ப்புற தனியார் பள்ளிகளுக்கும் வழங்கிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி ஆகியவைகளை ஆன்லைன் மூலம் வழங்கிட வேண்டும். மேலும் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். நாடாளுமன்ற தொகுதி என்ற கணக்கீடு செய்யாமல் அருகிலுள்ள சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணி புரியும் வகையில் ஆணை வழங்க வேண்டும்.

50 வயதிற்கு மேற்பட்டோர், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ பராமரிப்பில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும். கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், செல்வமணி, மேனாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் வரவேற்றார் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *