தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி இன்று முக்கிய நிகழ்வாக பந்தல் கால் நடும் விழா உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும்.

அதன்படி கடந்த 6-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வடம்பிடித்து திருத்தோரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது..
இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது. இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரை சுத்தம் படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.
தொடர்ந்து தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பந்தக்காலுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி, பன்னீர் உட்பட பல அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதையடுத்து மாலை அணிவிக்கப்பட்டு பந்தக்கால் ஊன்றப் பட்டது. இதில் செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *