நெல்லை பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; பிடிபட்ட சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விட வனத்துறை தீவிரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை கடந்த 16ம் தேதி இரவு வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றது.

இதை போல் பாபநாசம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் வீட்டிலிருந்த ஆட்டையும் சிறுத்தை தாக்கியது.

சங்கர் ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை வெகு தூரத்தில் மலைப்பகுதியில் பாதி உடலை கடித்து குதறிய நிலையில் போட்டுவிட்டு சென்றிருந்தது. எனவே அடுத்தடுத்து ஆடுகளை தாக்கிய சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரு பகுதிகளிலும் வனத்துறையினரின் மோப்ப நாயான நெஸ் (NEX) மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின் தொடர்ந்து சென்றனர். இறுதியாக அனவன்குடியிருப்பு பகுதியில் மோப்பம் பிடித்தபோது அப்பகுதியிலுள்ள பொத்தை பகுதியை மோப்ப நாய் சென்றடைந்தது. இதையடுத்து மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடமான வேம்பையாபுரம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர்

நேற்று கூண்டு வைத்தனர் தொடர்ந்து இணை இயக்குனர் இளையராஜா தலைமையில் வனக் குழுவினர் அங்கு முகாமிட்டு சிறுத்தையை கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறையினர்

வைத்த கூண்டில் சிக்கியது இதையடுத்து கிரைன் மூலம் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டோடு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் மேலும் பிடிக்கப்பட்ட சிறுத்தை மாஞ்சோலை அருகே கோதையாறு அணைக்கு மேல் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே கோதையாறு வனப்பகுதியில் தான் கடந்த ஆண்டு பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்திய அரிக்கொம்பன் காட்டு யானை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *