வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு
நீண்ட நேர தேடுதலுக்கு பின் உடலை மீட்டனர்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை இராமநாதபுரம் மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆற்றைக் கடக்கவோ இறங்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர்
இந்த நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் தீயணைப்பு துறை வீரராக பணியாற்றி வரும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் வைகை அணையில் உள்ள செக்டேம் பகுதியில் குளிக்கச் சென்றிருந்தார். செக் டேம் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து குதித்து குளித்துக் கொண்டிருந்த போது, அணையில் இருந்து கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சதீஷ்குமார் திடீரென சுழலில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கினார்.
இதனைக் கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் சதீஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து அவருடன் சென்ற நண்பர்கள் வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்ட போதும் சதீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டு நேற்று வியாழக்கிழமை காலை மீண்டும் சதீஷ்குமாரின் உடலை தேடும் பணியை தொடங்கி, தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சதீஷ்குமாரின் உடலை தேடும் பணியில் தேனி மாவட்டத்தில் உள்ள தீயணைப்புத்துறை வீரர்களும் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் வைகை அணை செக் டேம் முன்பாக உள்ள ஒரு பள்ளத்தில் சதீஷ்குமாரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
நண்பர்களுடன் சென்று குளித்த போது தண்ணீர் சுழலில் சிக்கி தீயணைப்பு துறை வீரர் சதீஷ்குமார் பலியான சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த தீயணைப்பு வீரரை மீட்பதற்காக அணையிலிருந்து நிறுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீரை மீண்டும் பொதுப்பணித்து றையினர் திறந்து விட்டனர்.