காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்த கோர தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு DSP உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில்அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்

அந்த வகையில் கோர தாக்குதல் நடைபெற்று 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள
நினைவுத் தூண் அருகே உயிர் நீத்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில்
உதவி காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்துக் காவல்நிலைய காவலர்களும், அந்த தாக்குதலில் காயமடைந்த காவலர்களும் அஞ்சலி செலுத்தினர்

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இறுதியில் இந்திய திருநாட்டில் தீவிரவாதத்தை வேரோடு களைவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன், சுங்குவார்சத்திரம் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த். போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி உள்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *