போக்குவரத்து துறை- போலீஸ் மோதல் விவகாரம்: சபாநாயகர் அப்பாவு கருத்து!
காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே நடந்த விபத்தில் 2 பெண்கள் இறந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளவர்களை நேற்று காலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் வெளியிடப்பட்டு உள்ளது.

முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் கவர்னருக்கும், அவரின் மனைவிக்கும் குல்லாவும், பர்தாவும் அணிவித்தால் அதனை கவர்னர் ஏற்றுக் கொள்வாரா?. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறை யாரை வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால், சென்று தங்கள் விளக்கத்தை கொடுத்து தான் வரவேண்டும். அதுதான் கடமை. காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக போலீசார் எனக்கு சம்மன் அனுப்பினால் நானும் சென்று பதில் அளிப்பேன், காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் மோதல் என்பது போன்ற பிம்பம் ஏற்பட்டு உள்ளது.

பஸ்சில் டிக்கெட் எடுக்க மாட்டேன். நானும் அரசு ஊழியர் தான் என்று அவர் பேசியிருக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *