தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில்
மாவட்டத்தின் சிறப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் டிஸ்கவர் தஞ்சாவூர் என்ற தலைப்பில் நடைபெற்று வந்த சிறப்பு பயிற்சி முகாம் விழா.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கைவினை கலைப் பொருட்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், விவசாயம், மற்றும் நிகழ்த்து கலைகள் குறித்து அந்தந்த துறையில் தலைசிறந்த வல்லுநர்கள் கொண்டு பயிற்சியும், களப்பயணம் மேற்கொண்டு நேரடி விளக்கமும் அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம் நிறைவுற்ற நாளில் மாணவ மாணவிகள் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சென்று அங்குள்ள அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சியை பார்த்து வியந்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இம்முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
விடுமுறை காலத்தில் இந்த பயிற்சி முகாமின் முக்கியத்துவத்தினை உணர்ந்து தங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்த பெற்றோர்கள் அனைவருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பேசுகையில் மாணவ மாணவிகள் இந்த முகாமில் ஏழு நாட்கள் பங்கேற்று தஞ்சையின் சிறப்புகளை அறிந்து கொண்டது போல், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், எந்த செயலையும் கேள்வி கேட்டு புரிந்து கொண்டு அதன்பின் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது வாழ்க்கையில் பயனுள்ள நிகழ்வாக இப்பயிற்சி இருந்தது எனவும், தஞ்சாவூரின் சிறப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததாகவும், தஞ்சாவூரில் பெருமைகளை போற்றி பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தொல்லியல் அறிஞர் செல்வராஜ், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்