வடக்கு வட்டார போக்குவரத்து போக்குவரத்து துறையின் சார்பில் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துதல், படிக்கட்டு வசதிகள் அவசர கால ஜன்னல் கதவுகள், முதலுதவி பெட்டிகள், ஜன்னல் பாதுகாப்பு வசதிகள், புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி, வாகனங்களின் தரை உறுதித்தன்மை, இருக்கைகள், தீயணைப்பு கருவி, பள்ளி வாகனம் என சின்னம் அச்சிடல், வாகனத்திற்கு மஞ்சள் வண்ணம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ஜிபிஎஸ் கருவி சென்சார் கருவி பொருத்துதல் உள்ளிட்ட 21அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என இந்த ஆய்வின் போது சோதிக்கப்பட்டது.

மேலும் வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது, தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை கொளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்து ஓட்டுநர்களுக்கு ஆபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் (பொறுப்பு) ஆய்வாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் இபுராஹிம் , தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஆர்.சூர்யபிரகாஷ் ,பள்ளி கல்வித்துறை அதிகாரி ஷியாம், கொரட்டூர் காவல் நிலைய போலீசார்கள் போக்குவரத்து ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 14 பள்ளிகளில் உள்ள 100 க்கும் வாகனங்களை
தணிக்கை செய்தனர். இதில்
குறைபாடு உள்ள வாகனங்களை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *