தென்காசி, மே – 25
தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க உத்தரவு வழங்கப்பட்டு உள்ளதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் 2ம் தலைநகர் அந்தஸ்தில் இருந்த தென்காசியில் அமைந்திருந்த அரசு மருத்துவமனையானது கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் மருத்துவமனைக்கு தேவையான கட்டிடங்கள், உபகரணங்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தி தரப்பட்டது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால், புதிதாக உருவாக்கப்படும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற ஆணையின் படி தென்காசியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் அப்போதைய தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தென்காசியில் புதிதாக மருத்துவகல்லூரி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி கோரிக்கை மனுவினை வழங்கியதுடன், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தென்காசி ஆய்க்குடி அமர்சேவா சங்கம் அருகில் 25 ஏக்கர் நிலத்தில் இம்மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அமைக்க அனுமதி கிடைத்த 6 மருத்துவ கல்லூரிகளில் முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்திற்கு பெற்றுத்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.